Tuesday, 24 May 2011

பனையும் அது தரும் பயன்களும்

பனை மரம் மனிதனின் எந்த முயற்சியும் இன்றி தானே இயற்கையாக வளர்ந்து


மனிதனுக்கு வேண்டிய பல பயன்களை கொடுக்கும் ஒரு இயற்கை வளம். ஈழம் மற்றும்

இந்தியாவில் காணப்படும் பனை மர இனத்தை Borassus flabellifer L. என்றும்,

ஆபிரிக்காவில் காணப்படும் பனை இனத்தை Borassus aenthipoum Mart. என்றும்

அழைப்பர்.........

உலக அளவில் அண்ணளவாக 140 மில்லியன் பனைமரங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.இந்தியா: 60 மில்லியன்


மேற்கு ஆபிரிக்கா - 50 மில்லியன்


ஈழம் - 11.1 மில்லியன்


இந்தோனெசியா - 10 மில்லியன்


மடகஸ்கார் - 10 மில்லியன்


மியன்மார் - 2.3 மில்லியன்


கம்பூச்சியா - 2 மில்லியன்


தாய்லாந்து - 2 மில்லியன்

இலங்கையை எடுத்து கொண்டால் 10.5 மில்லியன் பனை மரங்கள் யாழ்ப்பாணம்,

மன்னார், கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய 4 மாவட்டங்களிலும் பரம்பி இருக்க

மிகுதி 0.6 மில்லியன் மரங்கள் மட்டுமே ஏனைய இடங்களில் காணப்படுகிறது.


பனையின் பயன்கள்

1. பனை ஓலை

குருத்து ஓலையில் இருந்தே அதிகமான பயன் தரும் பொருட்கள் செய்யப்படுகிறன்.

கைவினைப்பொருட்களான: பூக்கள், பூச்சாடிகள், போன்றவை

நாளாந்த பாவனைப்பொருட்களான: பெட்டி, சுளகு, பாய், கடகம், திருகணை,

நித்துபெட்டி, இடியப்ப தட்டு என பல பொருட்கள் செய்ய உதவுகிறது.


முற்றிய ஓலை மாட்டுக்கு உணவாக பயன்படுத்த படுவதுடன், வீடு வெய, வெலிகள்

அடைக்க, தோட்ட நிலத்துக்கு, தென்னைக்கு பசளையாக பயன்படுத்தப்படுகிறது.2. நார்

பனம் ஓலை/ இலை யில் இருக்கும் தண்டு/ மட்டையில் இருந்து

பிரித்தெடுக்கப்படும் நார் நீண்ட நாள் பாவனைக்குரிய தூரிகைகள் (Brush),

துடைப்பங்கள் செய்யவும், கயிறு திரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.3. மரம்/ தண்டு

கட்டுமான பணிகளுக்கு குறிப்பாக வீட்டு கூரைகளுக்கு சிலாகை, தீரந்தி, வளை,

என்பவை தயாரிக்க பயன்படுத்த படுகிறது.

4. பூந்துணர் சாறு/ பதநீர் (Infloresence sap)

மதுவத்தால் (Yeast) நொதித்தல் அடையாத பூந்துணர் சாறு

பதநீராக அருந்தவும், பன்ஞ்சீனி, பனங்கட்டி, பனம் பாணி, பனங்கற்கண்டு

செய்யவும் பயன்படுத்தபடுகிறது. பதநீரை கருப்பணி என பேச்சு வழக்கில்

அழைப்பது வழக்கம். பதநீர் காலங்களில் பச்சரிசி, பயறு என்பனவும், பதநீரும்

கொண்டு கருப்பணி கஞ்சி தயாரிப்பதும் வழக்கம். பொதுவாக பத நீர் இறக்க

சுண்ணாப்பிடுவார்கள். சுண்ணாம்பு மதுவங்களின் நொதித்தல் செயற்பாட்டை

கட்டுப்படுத்தும். சுண்ணாம்பு பதநீரின் சுவையை மற்றிவிட கூடியது.

யாழ்ப்பாணத்தில் செய்யப்பட்ட ஆய்வில் நாவல் பட்டையையும் நொதித்தல்

செயற்பாட்டை கட்டுபடுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.பதநீரில் வெல்லம் 12-13% ம், அமினோ அமிலங்கள், விற்றமின் பி,

கனியுப்புக்கள் ஆகியவை நிறைய இருப்பதாக சொல்லப்படுகிறது. ஊரில்

சின்னமுத்து, அம்மை நோய் வந்தவர்கள் உடன் கள்ளு குடித்தால் நோய் தாக்கம்

குறையும் என்று சொல்லுவார்கள்.மதுவத்தால் நொதித்தல் (Fermentation) அடைந்த பின் கள்ளு என

அழைக்கப்படுவதுடன், இது சாரயாம் வடிக்கவும் பயன் படுகிறது.

5. நுங்கு

முற்றாத பனங்காயை நுங்கு என அழைப்போம். நுங்கு மிகவும் சுவையான ஒரு

பானம். ஆனால் அதனை நாம் தொழில் முயற்சியில் பயன்படுத்துவது இல்லை. 2

மில்லியன் பனைமரங்களே இருக்கும்தாய்லாந்தில் இருந்து நுங்கு தகரத்தில்

அடைக்கப்பட்டு உலகம் எங்கும் ஏற்றுமதியாக அதிக பனைமர வளத்தை கோண்ட

இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து எந்த முயற்சியும் எடுக்கப்படாமை

கொசுறு செய்தி.

6. பனம் பழம்

பனம் பழத்தில் இருந்து பெறப்படும் பழ கூழ் (Fruit pulp) பழபாகு (ஜாம்),

பனாட்டு, குளிர் பானம் என்பன செய்ய பயன்படுத்த படுகிறது. அதை விட சுவையான

சிற்றுண்டியான பனங்காய் பணியாரம் ஈழத்தில் பிரபலம். அதை வைத்து

காதல்கடிதம் படத்தில் ஒரு பாடலும் வருக்றது. போர் காலத்தில் பனம் பழம்

கொண்டு உடுப்பு தோய்த்தவர்கள் பலர். பனம் பழத்தின் வாசதில் மாடு உடைகளை

சாப்பிட்டதாக கூட சொல்லுவார்கள். அதை விட பனம் பழம் தீயில் வாட்டி

சாப்பிடுபவர்களும் உண்டு7. பனம் கிழங்கு

பனங்கிழங்கை அவிக்காது எடுக்கப்படும் ஒடியலில் இருந்து ஒடியல் மா

எடுப்பார்கள். ஒடியல் மாவில் இருந்து ஒடியல் பிட்டு, ஒடியல் கூழ்1

(ஒடியல் கூழ் 2)ஆகிய உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இவை ஈழத்தில் மிகவும்

பிரபலாமான உணவுகள்.

பனங்கிழங்கை அவித்து காய வைத்து வரும் புளுக்கொடியல், புளுக்கொடியல் மா

சிற்றுண்டியாக பயன் படுத்தப்படுகிறது.

[imghttp://www.mandaitivu.com/images/stories/patapatappu/panam+kilangku.jpg][/img]பனம் பொருடகள் சம்பந்தமான ஆராய்ச்சிகள் மிக குறைவாகவே நடைபெறுகிறன.

அப்படி செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்து பல பயனுள்ள தகவல்கள்

கிடைக்கப்பேற்றாலும் இன்னும் ஆராய்ச்சிகள் தேவையாக உள்ளது.

பெரும்பாலான ஆய்வுகள் அதிகம் பயன்படுத்தப்படாத பழ கூழ் பற்றியே நடைபெற்றுள்ளன.

ஒடியல் கூழ் (Fruit pulp)

Posted Image

1. கரோட்டினோயிட் (Carotenoids)

எனும் மஞ்சள் நிறபொருளை கொண்டிருக்கிறது. பனம் பழத்தில் 2-253

மில்லிகிராம் கரோட்டினொயிட் 100கிராம் பழத்தில் இருப்பதாக

அறியப்பட்டுள்ளது. இது விற்றமின் எ யிற்கான ஒரு மூலமாகும்

2. பெக்ரின்

இது உணவு உற்பத்தியில் உணவு பொருகளை உறுதியாக்க/

கூழ் நிலையில் பேண உதவும்.

3. Flabelliferin

இதுவெ பனம் பழத்தில் காணப்படும் கசப்பு, காறல் சுவைக்கு காரணமான

பதார்த்தமாகும். இதனை பழ கூழில் இருந்து பிரித்தெடுப்பதன் மூலம், பழ கூழை

வேறு உணவு பொருட்கள், ஜாம் போன்றவற்றில் நிரப்பியாக பயன் படுத்த

முடியும்.

அத்துடன் இந்த Flabelliferin எனும் பதார்த்தம் நுண்ணங்கிகளை கொல்லும்

இயல்பும் கொண்டது.


இலங்கையில் எலிகளில் செய்த ஆராய்சியில் Flabelliferin குருதியில் வெல்ல

அளவை குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் நீரிழிவு நோயளிகளுக்கு 6 கிராம் பனாட்டை கொடுத்து சோதனை செய்த

போது அவர்களின் குருதியில் இருக்கும் வெல்ல அளவில் குறைவு ஏற்பட்டதும்

அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணாம் பனாட்டில் இருக்கும்

Flabelliferin ஆக இருக்க முடியும்.இலங்கையில் பனை அபிவிருத்தி சபை பழகூழில் இருந்து பற்பசை செய்து

மாதிரிகளை சந்தைக்கு விட்டிருந்தது.

கேட்காமலே பயன் தரும் பனையை நாம் இன்னும் சிறப்பாக பயன் படுத்தி

பொருளாதார பயன் பெற முடியும். ஆனால் அதற்கு நிறைய ஆய்வுகள் தேவை.

Tuesday, 19 April 2011

விவசாயம் செழிக்க விரைவான நடவடிக்கை : நம்மாழ்வார்.

"கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி' என்று போற்றப்படும் விவசாயிகள் நலன் பெறவும், விவசாயம் செழித்திடவும், அடுத்து அமையும் அரசு செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிடுகிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

வேளாண்மைக்கு அடிப்படையானது விளைநிலம். வேளாண்மைக்குரிய நிலங்களை வேளாண்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற பிற பயன்பாடுகளுக்கு, விளை நிலத்தை எடுப்பதை, முதலில் தடை செய்ய வேண்டும்.கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில், 100 நாள் வேலையை எப்போது செய்ய வேண்டும் என்பதை, கிராம சபைகள் முடிவு செய்ய வேண்டும். அப்போது தான், வேளாண்மை தொழிலை கிராம மக்கள் தடையில்லாமல் செய்ய முடியும்.தமிழகத்துக்கும், கேரள, கர்நாடக மாநிலங்களுக்கும் கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வரும் நதிநீர்ப் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க, மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இந்த கோரிக்கைக்காக, அனைத்துக் கட்சி எம்.பி.,க்களும் ஒன்றுபட்டு பார்லிமென்டை புறக்கணிக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை தூர்வார வேண்டும். அப்போது தான், கடைமடை விவசாயிக்கும் தாராளமாக நீர் சென்றடையும். இப்பணிகளை உழவர் பிரதிநிதிகள் மூலம் செயல்படுத்த வேண்டும். ஏரி, குளங்களில் உள்ள கருவேலம் மரங்களை அகற்ற வேண்டும். அப்போது தான், குளங்களில் தேக்கப்படும் நீரை, வேளாண்மைக்கு முழுமையாகப் பயன்படுத்த முடியும்.காவிரி ஆற்றில், கொள்ளிடம் பகுதியில், 17 கதவணைகளை அமைக்க வேண்டும் என, பொதுப்பணித் துறை பொறியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதன்மூலம், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, கதவணைகளை மூடியும், பிற சமயங்களில் திறந்தும் நீரைச் சேகரித்து பயன்படுத்த முடியும். கடலை நோக்கிச் செல்லும் காட்டாற்று நீரை தேக்கி பயன்படுத்த, தடுப்பணைகள் கட்ட வேண்டியது அவசியம்.

பால், உரமாக பயன்படும் எருவை வழங்கும் மாடுகளை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை அரசு தடை செய்ய வேண்டும். கிராமப்புற ஆண்களும், பெண்களும் கொண்ட குழுக்களை அமைத்து, அக்குழுவிடம், மாடு வளர்ப்பதை ஒப்படைக்க வேண்டும். இதற்கு அரசு நிதியுதவியும் வழங்க வேண்டும்.ஆறு, ஏரி, குளம் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் வகையில் உருவாக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே, இயங்கி வரும் ஆலைகள் குறித்து கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு முடியும் வரை, அந்த ஆலைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏரி, குளங்களில் மீன் வளர்ப்புக்கு ஊக்கம் அளிப்பதோடு, மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் அப்பணியை ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம், கிராமப்புற மக்களிடம் நிலவி வரும் சத்துணவு குறைபாடுகளைப் போக்க முடியும்.

தோட்டக்கலையில், சவுக்கு, மூங்கில் உள்ளிட்ட மரங்கள் மற்றும் மாம்பழம் போன்ற பழ வகைகள் சாகுபடியை பெருக்க வேண்டும். நெல், கரும்பு உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதேபோல், அனைத்து பயிர்களையும் கொள்முதல் செய்ய புதிய மையங்களையும் தொடங்க வேண்டும்.
ஊராட்சிகளில் உழவர் ஆலோசனை மற்றும் சேவை மையங்களைத் தொடங்க வேண்டும். இதன் மூலமே, சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண்மை இடுபொருள்கள் வழங்கலாம்; பயிர் சாகுபடி பற்றி ஆலோசனைகளை அளிக்கலாம்; வேளாண்மை கருவிகளை வழங்கலாம்.வெள்ளப்பெருக்கு காலங்களில், பயிர் சேதங்களைத் தடுக்க பாரம்பரியப் பயிர்களை சாகுபடி செய்ய ஊக்கம் அளிக்க வேண்டும். ஒற்றை நாற்று முறை மூலம் நெல் உற்பத்தி 3 டன் முதல் 5 டன் எக்டேருக்கு அதிகரித்துள்ளது. இதை நாடு முழுவதும் பரப்புவதன் மூலம், அரிசி தட்டுப்பாட்டைப் போக்க முடியும். ஒற்றை நாற்று முறையை, மற்ற பயிர்களிலும் அறிமுகம் செய்ய வேண்டும்.

சோளம், கம்பு, தினை, சாமை போன்ற சத்துணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க அரசு ஊக்கப்படுத்த வேண்டும். தரிசாக உள்ள நிலங்களில், இதன் சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம், வேலைவாய்ப்பையும் அதிகரிக்கலாம்.தேசிய பல்லின பன்மை வாரியத்தை தமிழகத்துக்கு என அமைக்க வேண்டும். மரபின மாற்றுப் பயிர்களை தடை செய்ய வேண்டும். மாநில பட்டியலில் தான் வேளாண்மை உள்ளது. எனவே, இந்த நடவடிக்கையை மாநில அரசே செய்ய முடியும். மரபின மாற்றுப் பயிர்களால் புற்றுநோய் உள்ளிட்ட உயிர் குடிக்கும் நோய்கள் பரவும் என்பதால், அதன் ஆராய்ச்சிக்கும் தடை விதிக்க வேண்டும்.

கால்நடை மற்றும் விதைப் பண்ணைகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இவற்றை நஷ்டத்தில் இருந்து மீட்கவும், அதன் மூலம் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், மகளின் சுயஉதவிக் குழுக்களிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டும். இயற்கை வேளாண்மை வெற்றியடைந்து வரும் இந்த வேளையில், அதை விரிவுபடுத்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.சொட்டுநீர், தெளிப்புநீர் பாசன வசதிகளை எற்படுத்த, 100 சதவீத மானியத்தையும் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். ரசாயன உரங்களைப் பயன்படுத்த அளிக்கப்படும் மானியத்தை, இயற்கை வழி வேளாண்மையைச் செய்யும் விவசாயிக்கும் அளிக்க வேண்டும்.இவற்றை அடுத்து அமையும் அரசு விரைவாகச் செய்யுமானால், "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?' என்ற பாடல் வரிகளை உண்மையாக்க முடியும்.

நம்மாழ்வார், இயற்கை வேளாண் விஞ்ஞானி.

Wednesday, 6 April 2011

விவசாயத்தை எதிர்நோக்கும் முக்கிய பிரச்னை

பயிருக்கு தேவையான சத்துக்களில் முக்கியமானது தழைச்சத்து எனப்படும் நைட்ரஜனும், மணிச்சத்து எனப்படும் பாஸ்பரசும், சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஷ் சத்தும் ஆகும். உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றாற்போல் உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு உரங்களின் தேவை இன்றியமையாதது ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் 17 மில்லியன் டன் மணிச்சத்து சார்ந்த உரங்களை இடுகின்றனர். அது மட்டுமின்றி இதன் தேவை ஆண்டொன்றுக்கு 3 சதம் அதிகரிக்கிறது. தற்போது மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தி வர தொடங்கி உள்ளது. தற்போதைய நிலவரப் படி இன்னும் 30-40 ஆண்டுகள் வரைதான் விவசாய வளர்ச்சிக்கு இணையாக மணிச்சத்து சார்ந்த உரங்களை உற்பத்தி செய்ய முடியும். அது மட்டுமல்ல, தற்போது உற்பத்தியாகும் மணிச்சத்தில் 90% மொராக்கோ, சீனா, தென் அமெரிக்கா, ஜோர்டான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கிடைக்கிறது. எண்ணெய் வளம் கூட 75% 12 நாடுகளிலிருந்து கிடைக்கிறது. ஆனால் மணிச்சத்தோ 5 நாடுகளிடம் மட்டுமே உள்ளது. தட்டுப்பாடு காலங்களில் சீனா மணிச்சத்துக்கான ஏற்றுமதி வரியை 135 சதம் உயர்த்தியது. அமெரிக்காவின் மணிச்சத்து சுரங்கங்கள் இன்னும் 20 வருடங்களில் வற்றிவிடும் அபாயநிலை உள்ளது. இதன் விளைவாக கடந்த 2003 முதல் 2006 வரை மணிச்சத்தின் விலை 350 சதம் உயர்ந்துள்ளது. 30 வருடங்களுக்குப் பிறகு மணிச்சத்தின் உற்பத்தி பெருமளவு குறைந்தால் மால்தூஸ் கூறியபடி பெரும் பஞ்சம் வரக்கூட வாய்ப்பு உள்ளது. இதற்கு தீர்வாக முழுமையான இயற்கை விவசாயத்தை நோக்கி சென்றாலும் வளரும் மக்கள் தொகைக்கு உணவளிப்பது கடினம்.
இதற்கு தீர்வுதான் என்ன?: 1. முடிந்த அளவு மணிச்சத்தை தற்போதிலிருந்தே சாணம் மற்றும் இயற்கை எருக்கள் (பசுந்தாள் உரம்) மூலம் இட தொடங்க வேண்டும்.
2. தேவையற்ற மணிச்சத்து உரத்தை அளிப்பதை தவிர்க்க வேண்டும். பயிருக்கு தேவையான அளவு மணிச்சத்தை தேவையான நேரத்தில் தேவையான முறையில் மட்டும் கொடுக்க வேண்டும். இதன் மூலம் மணிச்சத்து வீணாவதை குறைப்பதுடன் பயிரின் உற்பத்தி செலவை குறைத்து லாபத்தையும் பெருக்கலாம். மண் பரிசோதனை செய்வதன் மூலம் பயிருக்கு தேவையான மணிச்சத்தின் சரியான விகிதத்தை எளிதில் அறிந்துகொள்ளலாம்.
3. மண்ணில் அதிக அளவு மணிச்சத்து உள்ளது. ஆனால் அவை பயிரால் உபயோகப்படுத்த முடியாதபடி உள்ளது. ஒரு சில நுண்ணுயிர்கள் அமிலத்தை உற்பத்தி செய்து, மணிச்சத்தை கரைத்து பயிர்களின் வேர்கள் எடுக்கும் நிலைக்கு மாற்றிக் கொடுக்கும். இதன்மூலம் மணிச்சத்து உரத்தின் தேவையை குறைக்கலாம். இவ்வகை நுண்ணுயிரிகளை பாஸ்போ பாக்டீரியா என்று அழைக்கிறோம். ஆனால் இவை மண்ணில் இருக்கும் பயிர்களால் எடுக்க முடியாத மணிச்சத்தைதான் பயிருக்கு எடுக்க உதவும்.
4. மணிச்சத்து குறைந்த அளவு எடுத்து அதிக விளைச்சலை கொடுக்கும் ரகங்களை வேளாண் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க வேண்டும்.
5. மனித கழிவுகளில்தான் அதிக அளவு மணிச்சத்து உள்ளது. எனவே நகர்ப்புற மனித கழிவுகளிலிருந்து மணிச்சத்தை எடுக்கும் வழி வகையை கண்டுபிடிக்க வேண்டும்.
எண்ணெய் வளம் குறைந்தால்கூட அதற்கு மாற்று சக்தியாக சூரிய ஒளி, காற்று, அணு சக்தி என்று பல உள்ளது. ஆனால் மணிச்சத்து உரத்துக்கு மாற்று மேல் சொன்ன முறைகள்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. வருங்கால சந்ததியரின் உணவுத்தேவை குறித்து இப்போதே சிந்திப்பது நல்லது. இந்த பிரச்னையின் பரிமாணம் இன்னும் உலகுக்கு பெரிய அளவில் தெரியவில்லை.

ஆட்டு எரு ஓர் சத்துமிக்க இயற்கை உரம்

நம் நாட்டில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியினை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளது. அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கினை விளைவிக்கின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க நாம் பயன்படுத்தும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்களே நம்மை சிறிது சிறிதாக அழித்துக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் ரசாயன உரங்களின் விலையும் இப்பொழுது வேகமாக உயர்ந்துகொண்டே போகிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இயற்கை உரங்கள் இட்டு உற்பத்தி செய்த காய்கறிகளை அதிக விலைகொடுத்து வாங்கி உண்ணும் பழக்கம் உள்ளது. இது எதைக்காட்டுகிறது என்றால், செயற்கை உரம் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் என்பதுதானே. இதுபோன்ற எல்லா பிரச்னைகளையும் போக்க இயற்கை நமக்கு தந்த வரப் பிரசாதம்தான் ஆட்டு எருவாகும்.
ஆட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைப் போல் 2 மடங்கு தழைச்சத்தும், சாம்பல் சத்தும் உள்ளது. ஒரு ஆடு, ஒரு வருடத்திற்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் கொடுக்கும். ஒரு ஏக்கர் நிலத்தை எல்லா சத்துக்களையும் கொண்டு தயார்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது. "ஆட்டு எரு அவ்வாண்டு மாட்டு எரு மறு ஆண்டு' என்ற பழமொழிக்கு ஏற்ப ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்கி, பசுமைப்புரட்சிக்கு வித்திடுகிறது என்றால் மிகையாகாது. ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருட்களின் அளவு அதிகரித்து ஈரப்பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாகிறது.
ஆட்டு எருவில் உள்ள சத்துக்களின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவைகளுக்கு அளிக்கப் படும் தீவனத்தைப் பொறுத்தே இருக்கும். ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களை குதிரைமசால், முயல்மசால், வேலி மசால், சுபாபுல், தட்டைப்பயறு போன்ற தீவனங்களை அளித்தால் எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு நுண்ணூட்டச் சத்துக்களும் தாது உப்புகளும் அதிகமாகக் காணப்படும். ஆட்டு எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 2 சதம் தழைச்சத்தும், 0.4 சதம் மணிச்சத்தும் 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளது. மேலும் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் சத்துகளும் அதிகளவில் காணப்படுகிறது.
நம்முடைய அன்றாட விவசாயத்திற்கு அதிகளவில் ஆட்டு எரு தேவைப்படுமாயின் அவற்றை ஆழ்கூள முறையில் தயார் பண்ணலாம். அதற்கு முதலில் ஆட்டுக்கொட்டகையின் தரைப் பகுதியில் நிலக்கடலைத்தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச்சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க்கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஒரு ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் பரப்பவேண்டும். அவ்வாறு பரப்பினால் ஆட்டுப் புழுக்கையானது இந்த ஆழ்கூளத்தில் படிந்துவிடும். சிறுநீர் ஆழ்கூளத்தால் உறிஞ்சப்பட்டு தழைச்சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ்கூளத்தில் உள்ள ஈரத்தன்மையை பொறுத்து 3லிருந்து 4 மாதத்திற்கு ஒரு முறை ஆழ்கூள ஆட்டு எருவை விவசாயத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.
ஆழ்கூள முறையை பொறுத்தமட்டில் 10 ஆடுகளிலிருந்து ஒரு வருடத்தில் இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இதில் 50 கிலோ யூரியாவில் உள்ளதைப்போல் தழைச்சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச்சத்தும், 40 கிலோ பொட்டாஷில் உள்ள சாம்பல்சத்தும் கிடைக்கும். மேலும் ஆட்டு எருவில் உள்ள தழைச்சத்து மெதுவாக வெளிப்படுவதால் பயிர்கள் மற்றும் காய்கறிகளின் தேவைக்கேற்ப தழைச்சத்து சீராக கிடைக்கிறது. ஆனால் ரசாயன?உரம் தழைச்சத்தை உடனடியாக வெளியிடுவதால் நிறைய சத்து ஆவியாகி வீணாகிவிடும். இவ்வாறு ஆழ்கூள முறையில் பெறப்படும் ஆட்டு எருவை வேளாண் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும் எருவை நெல், தக்காளி, மிளகாய், கத்தரி மற்றும் அனைத்துவிதமான வேளாண் பொருட்களுக்கும் பயன் படுத்தினால் அதிக லாபத்தையும் அடையலாம். ரசாயன கலப்படத்தை தடுத்து உயிரிழப்பையும் தவிர்க்கலாம். ஆகவே ஆட்டு எருவினை முறையாக பயன்படுத்தி இயற்கைவழி வேளாண்மைக்கு வித்திட்டால் நாமும் உயரலாம். நமது நாடும் உயரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை

Sunday, 20 March 2011

சிட்டுக்குருவி எண்ணிக்கை குறைவால் உணவு உற்பத்தியில் பாதிப்பு

பழநி : சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை குறைய, குறைய உணவு உற்பத்தியும் குறையும் என, சிட்டுக்குருவி தினத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.பழநி மலை பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் அக்ஷயா கலையரங்கில் "குருவிகள் தினம்' கொண்டாடப்பட்டது. பழநி மலை பாதுகாப்பு மன்ற தலைவர்கண்ணன், சுற்றுச்சூழல் ஆர்வலர் சதாசிவம், செயற்குழு உறுப்பினர் அருட்செல்வன் உள்ளிட்டோர் பேசினர்.இங்கு பேசியவர்கள் குறிப்பிட்ட விபரங்கள்:
60 கோடி மொபைல் போன்கள் உள்ளன. இதற்காக 5 லட்சம் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஏற்படும் மைக்ரோ வாய்ஸ் அதிர்வால் 30 சதவீத சிட்டுக்குருவிகள் அழிந்து விட்டன. சிட்டுக்குருவி, தேனீ உள்ளிட்டவை அழிந்து கொண்டே வருவதால், அயல் மகரந்த சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது. வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளும், சிட்டுக்குருவிகளுக்கு விஷமாக மாறி, அவைகள் உயிரிழக்க நேரிடுகிறது.தொடர்ந்து கட்டப்படும் கான்கிரீட் வீடுகளால் சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்டுவதற்கு போதிய இட வசதி இல்லாததாலும் அவற்றின் இருப்பிடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிட்டுக்குருவிகளை பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையை பெருக்க மரத்தாலோ, மூங்கிலாலோ அல்லது மண் கலசங்கள் மூலமாகவோ சிட்டுக்குருவிகளின் கூடுகளை செய்து ஜன்னல் அல்லது நிழல் தட்டி போன்ற இடங்களில் தொங்க விட வேண்டும். சிட்டுக்குருவிகள் எங்கு தென்பட்டாலும் அவற்றிற்கு தானியங்கள் மற்றும் தண்ணீரை வழங்க வேண்டும்.சிட்டுக்குருவி ஜோடிகள் தென்பட்டால் அவற்றின் செயல்பாடுகளை, உணவு முறையை, முட்டையிடுவதை கண்காணிக்க வேண்டும். வேளாண்மைக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இருக்க, விழிப்புணர்வு முயற்சிகளையோ அல்லது சரியான அறிவுரைகளையோ வழங்க வேண்டும்.

Thursday, 3 March 2011

இயற்கை விவசாயமே எங்கள் உயிர் மூச்சு ராமரணை கிராம விவசாயிகள் பெருமிதம்

திம்பம் அருகே உள்ள ராமரணை கிராம மக்கள் இயற்கை விவசாயம் புரிந்து நல்ல விளைச்சலை பெற்று முன்னோடியாக உள்ளனர்.சத்தியமங்கலத்தில் இருந்து 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து சென்றால் திம்பம் மலைப்பகுதி வரும். அங்கிருந்து தலமலை வழியாக சென்றால் 20வது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராமரணை என்னும் நஞ்சுபடாத கிராமம். இயற்கையான காற்று; திரும்பிய பக்கமெல்லாம் பச்சைப் பசேல் என்று வளர்ந்து நிற்கும் மரங்கள் காணப்படுகிறது.
யானை நடமாட்டம் அதிகமுள்ள இந்த கிராமத்தில் 15 குடும்பங்களில் 60க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மின்சார வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி எதுவுமின்றி இயற்கையோடு அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வனத்தை நேசித்து பழகிப்போன மக்களுக்கு வன விலங்குகளை பார்த்தும் பயம் கிடையாது. 70க்கும் மேற்பட்ட ஏக்கரில் மானாவாரியாக இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் இன்று செயற்கை ரசாயன உரங்களை கொண்டு பயிரிடுகின்றனர். ஆனால், இந்த கிராமத்தை சேர்ந்த சில விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்கின்றனர். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் வானகம் போன்ற சில பசுமை அமைப்புகளும் ஊர் ஊராய் சென்று இயற்கை விவசாயத்தை பறைசாற்றி வருகின்றனர்.

ராமரணை கிராமம் மழை வளம் அதிகமுள்ள கிராமம். மானாவாரி விவசாயம் இங்கு செழிப்போடு உள்ளது. இப்பகுதி மக்களின் விவசாய முறையே வித்தியாசப்பட்டது; வனத்தில் உள்ள காய்ந்த இலைகள், சருகுகள் மேலும் கால்நடை கழிவுகள் முதலியவற்றை கொண்டு உரம் தயாரித்து பயன்படுத்துகின்றனர். பீன்ஸ், ராகி, எள் போன்றவற்றை பயிரிடுகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஈரோடு, திருப்பூர், கோத்தகிரி பசுமை அங்காடிகளில் விற்பனை செய்கின்றனர். இயற்கை முறையில் விளைவித்த பொருட்களுக்கு சந்தையில் அதிக விலை கிடைக்கிறது.

ராமரணையை சேர்ந்த ராமன் கூறியதாவது: பல ஆண்டுகளாக நாங்கள் இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். கண்ட கண்ட ரசாயன உரம் போட்டு மண்ணை பாழ்படுத்த விரும்ப மாட்டோம். இயற்கை விவசாயத்திலேயே எல்லாம் கிடைக்கும் போது எதுக்கு செயற்கை. சுடர் நிறுவனம் மூலம் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி நடந்தது. இப்போது நாங்களே மண்புழு உரம் உற்பத்தி செஞ்சுக்கறோம்; நல்ல விளைச்சல், நல்ல விலை இரண்டுமே கிடைக்குது. காட்டுக்குள்ளே இயற்கையோட ஒன்றி வாழ்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்

Wednesday, 23 February 2011

விவசாயத்தை கைவிட்டு எங்கே போவது?

இந்திய வேளாண்துறை தன்னுடைய வலிமைக்கு மேல் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. இங்கு விவசாயத்தில் ஈடுபட்டிருப்போரின் எண்ணிக்கை தேவைக்கும் அதிகமானது என்பதை எல்லா அறிவுஜீவிகளும் ஒப்புக்கொள்வார்கள். நம்நாட்டு வேளாண்துறையில் அதிக அளவில் வேலைவாய்ப்பின்மை இருக்கிறது என்பதுதான் இதன் பொருள். இந்தக் கூடுதலான மக்களை வேளாண்துறையில் இருந்து விடுவித்து, வேளாண்துறை மீதான கூடுதல் அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்பது பற்றித்தான் இப்போது பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் மன்மோகன் சிங்கும் இதே கருத்தைக் கொண்டிருப்பவர்தான். கடந்த மாதம் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் பேசிய அவர், “வேளாண்துறையில் இருந்து தேவைக்கு அதிகமானோரை வெளியேற்றுவது ஒன்றுதான் நம்நாட்டில் வறுமையை ஒழிக்கும் வழி’ என்றார்.
முழுவீச்சிலான தொழில்மயமாதலால் இந்தியாவில் வறுமையை ஒழிக்க முடியும் என்று நம்பும் பலர் பிரதமரின் கருத்தை ஆதரிப்பார்கள். இதற்காக அமெரிக்கா போன்ற தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளின் நிலைமையையும் சுட்டிக் காட்டுவார்கள்.
உண்மைதான். அமெரிக்காவில் வேலைசெய்யும் திறனுடையோரில் வெறும் 1.4 சதவீதம் பேர்தான் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். நேரடியான விவசாயத் தொழிலில் வெறும் 22 லட்சம் பேர்தான் ஈடுபட்டிருப்பதாக 2007-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட அமெரிக்க விவசாயக் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் இது ஒரு சதவீதத்துக்கும் குறைவானதாகும். அதேபோல் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் வேளாண்மையின் பங்களிப்பு 0.8 சதவீதம்தான்.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளைக் கொண்ட பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி) அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், வேளாண்துறைக்கான மானிய உதவி அதிகரிக்கப்படுவது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டில் அந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் வழங்கிய வேளாண்துறை உற்பத்தியாளர்களுக்கான உதவி மட்டும் ரூ. 12.5 லட்சம் கோடி என அதில் மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர வேளாண் ஆராய்ச்சி, சந்தைப்படுத்துதல் போன்றவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் மொத்த மானியம் ரூ. 17.5 லட்சம் கோடியாக இருக்கும். அதற்கு முந்தைய ஆண்டைக்காட்டிலும் இது அதிகமாகும்.
விவசாயத்துக்கான மானியத்தைக் குறைத்துக் கொள்ளும்படி உலக வர்த்தக நிறுவனம் ஒவ்வோராண்டும் பரிந்துரைத்துவரும் நிலையில், வளர்ந்த நாடுகள் மானியத்தை அதிகரித்து வருகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
வேளாண்துறைக்கு அதிக அளவில் மானியம் வழங்கும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. 1995 முதல் 2008 வரை அந்த நாடு வேளாண்துறைக்காக ரூ. 12 லட்சம் கோடி மானியம் வழங்கியிருக்கிறது. இப்படி மானியத்தை அள்ளித்தந்து வர்த்தகத்தைக் குலைப்பதாகக்கூறி உலக வர்த்தக நிறுவனம்கூட அமெரிக்காவை அண்மையில் கடிந்துகொண்டது நினைவிருக்கலாம்.
உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளைக் காட்டிலும் மற்ற நாடுகளில்தான் விவசாயத்தை நம்பியிருக்கும் மக்கள்தொகை அதிகமாக இருக்கிறது. 2008-ம் ஆண்டில் வெளியான உலக மேம்பாட்டு அறிக்கையின்படி ஓஇசிடி அமைப்பிலுள்ள நாடுகளிலுள்ள மொத்த வேலைவாய்ப்பில் வேளாண்துறையின் பங்களிப்பு சதவீதம் ஒற்றை இலக்கத்திலேயே இருக்கிறது. உதாரணமாக ஆஸ்திரேலியா – 4.1, கனடா – 2.7, பிரான்ஸ் 4.2, ஜெர்மனி 2.4, இத்தாலி 2.0, ஜப்பான் 4.6, ஸ்பெயின் 5.7, ஸ்வீடன் 2.1, சுவிட்சர்லாந்து 4.1, பிரிட்டன் 1.3 என்ற அளவிலேயே இந்த விகிதம் இருக்கிறது. இது 2002-04-ம் ஆண்டுகளில் கணக்கிடப்பட்ட புள்ளிவிவரம்தான். இப்போது இந்த மதிப்பு இன்னும் குறைந்திருக்கும்.
ஓஇசிடி அமைப்பில் 33 நாடுகள் இருந்தாலும் அந்த நாடுகளின் மொத்த மக்கள்தொகை 119 கோடிதான். இதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி (30.7 கோடி) அமெரிக்காவினுடையது. அதனால்தான் வேளாண்துறை சீர்திருத்தம் பற்றிப் பேசும்போது அமெரிக்கா உதாரணம் காட்டப்படுகிறது. இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது.
ஆனால், இந்தியாவின் மக்கள்தொகை அமெரிக்காவைக் காட்டிலும் மூன்றுமடங்கு அதிகம். நிலப்பரப்போ அமெரிக்காவின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதிதான். அதனால், இந்தியாவின் நிலையை அமெரிக்காவுடன் ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஒரு தோராயமாகக் கணக்கிட்டால், வளர்ச்சியடைந்த நாடுகளில் விவசாயத்தை நம்பியிருக்கும் மக்கள்தொகை வெறும் 3 முதல் 4 சதவீதம்தான். அதாவது எல்லா வளர்ச்சியடைந்த நாடுகளையும் சேர்த்தே வேளாண்மையை நம்பியிருப்போரின் எண்ணிக்கை 3 முதல் 4 கோடி மட்டுமே. அதுவே இந்தியாவை எடுத்துக்கொண்டால், சுமார் 60 கோடி பேர் வேளாண்மையை நம்பியிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள எண்ணிக்கையைவிட இது 20 மடங்கு அதிகமாகும்.
வளர்ச்சியடைந்த நாடுகளை ஒப்பிடுகையில் தனிநபருக்கான விவசாய நிலத்தின் அளவும் மிகக் குறைவாகும். உதாரணமாக, அமெரிக்காவிலுள்ள விவசாய நிலத்தைப் பங்கிட்டால் சராசரியாக ஒரு விவசாயிக்குக் கிடைக்கும் பரப்பு 418 ஏக்கராகும். ஆனால், அதுவே இந்தியாவில் இருக்கும் 15.8 கோடி ஏக்கர் விவசாய நிலத்தை 1.29 கோடி விவசாயிகளுக்குப் பங்கிட்டால் ஒருவருக்கு வெறும் 1.23 ஏக்கர்தான் கிடைக்கும்.
இந்தியாவில் குறைந்த அளவில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மிக மிக அதிகம். அரசு அளித்திருக்கும் அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 64.77 சதவீதம் பேர் ஒரு ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விளிம்புநிலை விவசாயிகள் எனவும், 18.52 சதவீதம் பேர் 1 முதல் 2 ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகள் எனவும், 10.93 சதவீதம் பேர் 2 முதல் 4 ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் மத்திய நிலை விவசாயிகள் எனவும் தெரியவந்திருக்கிறது. இதன்படி பார்த்தால், நம் நாட்டு விவசாயிகளில் 94.22 சதவீதம் பேரிடம் 4 ஹெக்டேருக்கும் குறைவான நிலமே இருக்கிறது.
மேலும், நாட்டில் அதிகம்பேர் விவசாயத்தைத்தான் நம்பியிருக்கின்றனர். அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களில் சில தவறுகள் இருந்தாலும், இந்த உண்மையை யாரும் மறுக்கப் போவதில்லை. அப்படியானால், பிரதமர் சொல்வதுபோல் வேளாண்துறையிலிருந்து சுமார் 20 கோடி பேரை வெளியேற்றத்தான் வேண்டும். அப்போதுதான் அவரது கருத்துப்படி நெருக்கடி குறையும். அப்படியானால் வேளாண்மையிலிருந்து வெளியேறும் மக்களை என்ன செய்வது? நமது பொருளாதாரத்தின் வேறு ஏதாவது துறையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க முடியுமா?
நடைமுறையில் அது சாத்தியமேயில்லை. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், எந்தத் துறையும் இவ்வளவு அதிகமான ஆள்களுக்கு வேலை வழங்கும் நிலையில் இல்லை. வேலைக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதிக அளவில் அமைப்புசார் பணிகளை வழங்கும் அரசுத்துறையும் இப்போது திணறி வருகிறது.
அண்மையில் ஆந்திரத்தில் குரூப் – 4 பதவிகளுக்கான 638 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானபோது சுமார் 12 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். மாநிலம் முழுவதும் 2,894 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. இந்த ஓர் உதாரணம் போதாதா, அரசு வேலைக்கும் எவ்வளவு போட்டியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள?
வேளாண்துறையில் இருந்து குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையிலான மக்களை வேறு துறைக்கு மாற்றவும், வேளாண் நிலங்களின் பரப்பை ஒன்றுபடுத்தவும் பிரதமர் எடுக்கும் முயற்சியால், வேளாண்துறைக்கு வெளியே அதிகம் பேர் வேலையில்லாமல் இருப்பார்களே ஒழிய, வேலைவாய்ப்பின்மையைத் தீர்க்க முடியாது.
போதிய வருமானம் இல்லாத நிலையில், விவசாயத்தைத் தொடர்ந்து செய்வதற்குப் பெரும்பாலான இந்திய விவசாயிகள் விரும்பவில்லை. வேறு ஏதாவது நல்ல வேலைவாய்ப்புக் கிடைத்தால், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு மகிழ்ச்சியாகச் சென்றுவிடுவார்கள். பாதுகாப்பான வருமானம் தரும் வேலைவாய்ப்புக் கிடைக்குமென்றால், விவசாயத்தை விட்டுச்செல்வதில் அரசைவிட விவசாயிகளுக்கு அதிக மகிழ்ச்சி இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
தொழில் மயமாதலை முடுக்கிவிட்டு அதன் மூலம் வேளாண்மையிலிருந்து மக்களை விடுவிக்கலாம் என்பது இப்போது முன்வைக்கப்படும் வாதம். அமெரிக்காவுக்குப் பொருந்தும் இந்தக் கொள்கை, இந்தியாவுக்குப் பொருந்தவே பொருந்தாது.
ஏனெனில், அமெரிக்காவில் வேளாண்துறையும்கூட தொழில்மயமாகிவிட்டது. நிலம் ஒன்றிணைக்கப்பட்டு பெரும்பரப்பில் ஒரே மாதிரியான விவசாயம் செய்யப்படுகிறது. தேவைப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அங்கு மிக மிகக் குறைவு. எல்லாம் இயந்திரமயமாகிவிட்டதால், ஒரு சிலரே பல நூறு ஏக்கர் நிலத்தில் விவசாயப் பணிகளைக் கவனித்துக் கொள்ள முடிகிறது. அங்கிருப்பவர்கள் எல்லாம் பெரு விவசாயிகள். அரசு வழங்கும் மானியங்கள் எல்லாம் பெருவிவசாயிகளின் நலனுக்கானவையாகவே இருக்கின்றன. இதற்கெல்லாம் மேலாக, ஒரே பொருளை பெருமளவில் உற்பத்தி செய்யும் நுட்பமே அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் அப்படியில்லை. ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான பொருள் உற்பத்தியில் பல நூறு பேர் ஈடுபடுகின்றனர். இங்கு விவசாயம் என்பது வெறும் உணவு சப்ளை செய்யும் அமைப்பல்ல. இந்தியாவின் பெரும் மக்கள்தொகைக்கு வாழ்வாதாரமே இதுதான்.
ஒருபக்கம் தானியங்கள் வீணாவது, மறுபுறம் மக்கள் பலர் உணவு கிடைக்காமல் பசியோடு நாள்களைக் கழிப்பது என வேளாண்துறையில் இருக்கும் முரண்கள் பற்றி ஏற்கெனவே பலமுறை விவாதித்திருக்கிறோம். இதுவரை அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் காகிதங்களில் மட்டும்தான் வறுமையை ஒழித்திருக்கின்றன. இந்தியாவில் சுமார் 70 சதவீதம்பேர் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று பல ஆய்வறிக்கைகளில் சுட்டிக்காட்டிய பின்பும், அரசு அதை ஏற்க மறுக்கிறது. நாட்டில் வெறும் 7 முதல் 8 சதவீதம் பேருக்குத்தான் பாதுகாப்பான முறைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு இருக்கிறது. கொஞ்சம்பேர் சுயதொழில் செய்கிறார்கள். இன்னும் சிலர் பணக்காரர்கள். இதுபோக, நாட்டில் மீதியிருக்கும் 70 சதவீதம் பேர் ஏழைகள்தான் என்கிற உண்மை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கப்படுகிறது என்று தெரியவில்லை.
இந்திய விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், நமது சிறு பண்ணை விவசாயத்தை நல்லதொரு வாய்ப்பாகக் கருத வேண்டும். வளர்ச்சி என்கிற பெயரில் நமது விவசாயத்தின் இந்தப் பண்பு அழிக்கப்பட்டுவிடக்கூடாது. மக்கள் நலன் பேணப்பட வேண்டும், வேளாண்மை வளர்ச்சியடைய வேண்டும், அனைவருக்கும் உணவும் உரிய வேலையும் வழங்க வேண்டும் என அரசு உண்மையிலேயே விரும்புமானால் விவசாயத்தைச் சீர்திருத்துவதற்கு இந்தியாவுக்குப் பொருந்தும் சிறந்த உத்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு விளையாட்டுப் போட்டியை நடத்த ரூ. 70 ஆயிரம் கோடி செலவு செய்யும் அரசால் இது முடியாதா என்ன?