Wednesday 23 February 2011

விவசாயத்தை கைவிட்டு எங்கே போவது?

இந்திய வேளாண்துறை தன்னுடைய வலிமைக்கு மேல் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. இங்கு விவசாயத்தில் ஈடுபட்டிருப்போரின் எண்ணிக்கை தேவைக்கும் அதிகமானது என்பதை எல்லா அறிவுஜீவிகளும் ஒப்புக்கொள்வார்கள். நம்நாட்டு வேளாண்துறையில் அதிக அளவில் வேலைவாய்ப்பின்மை இருக்கிறது என்பதுதான் இதன் பொருள். இந்தக் கூடுதலான மக்களை வேளாண்துறையில் இருந்து விடுவித்து, வேளாண்துறை மீதான கூடுதல் அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்பது பற்றித்தான் இப்போது பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் மன்மோகன் சிங்கும் இதே கருத்தைக் கொண்டிருப்பவர்தான். கடந்த மாதம் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் பேசிய அவர், “வேளாண்துறையில் இருந்து தேவைக்கு அதிகமானோரை வெளியேற்றுவது ஒன்றுதான் நம்நாட்டில் வறுமையை ஒழிக்கும் வழி’ என்றார்.
முழுவீச்சிலான தொழில்மயமாதலால் இந்தியாவில் வறுமையை ஒழிக்க முடியும் என்று நம்பும் பலர் பிரதமரின் கருத்தை ஆதரிப்பார்கள். இதற்காக அமெரிக்கா போன்ற தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளின் நிலைமையையும் சுட்டிக் காட்டுவார்கள்.
உண்மைதான். அமெரிக்காவில் வேலைசெய்யும் திறனுடையோரில் வெறும் 1.4 சதவீதம் பேர்தான் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். நேரடியான விவசாயத் தொழிலில் வெறும் 22 லட்சம் பேர்தான் ஈடுபட்டிருப்பதாக 2007-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட அமெரிக்க விவசாயக் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் இது ஒரு சதவீதத்துக்கும் குறைவானதாகும். அதேபோல் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் வேளாண்மையின் பங்களிப்பு 0.8 சதவீதம்தான்.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளைக் கொண்ட பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி) அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், வேளாண்துறைக்கான மானிய உதவி அதிகரிக்கப்படுவது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டில் அந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் வழங்கிய வேளாண்துறை உற்பத்தியாளர்களுக்கான உதவி மட்டும் ரூ. 12.5 லட்சம் கோடி என அதில் மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர வேளாண் ஆராய்ச்சி, சந்தைப்படுத்துதல் போன்றவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் மொத்த மானியம் ரூ. 17.5 லட்சம் கோடியாக இருக்கும். அதற்கு முந்தைய ஆண்டைக்காட்டிலும் இது அதிகமாகும்.
விவசாயத்துக்கான மானியத்தைக் குறைத்துக் கொள்ளும்படி உலக வர்த்தக நிறுவனம் ஒவ்வோராண்டும் பரிந்துரைத்துவரும் நிலையில், வளர்ந்த நாடுகள் மானியத்தை அதிகரித்து வருகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
வேளாண்துறைக்கு அதிக அளவில் மானியம் வழங்கும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. 1995 முதல் 2008 வரை அந்த நாடு வேளாண்துறைக்காக ரூ. 12 லட்சம் கோடி மானியம் வழங்கியிருக்கிறது. இப்படி மானியத்தை அள்ளித்தந்து வர்த்தகத்தைக் குலைப்பதாகக்கூறி உலக வர்த்தக நிறுவனம்கூட அமெரிக்காவை அண்மையில் கடிந்துகொண்டது நினைவிருக்கலாம்.
உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளைக் காட்டிலும் மற்ற நாடுகளில்தான் விவசாயத்தை நம்பியிருக்கும் மக்கள்தொகை அதிகமாக இருக்கிறது. 2008-ம் ஆண்டில் வெளியான உலக மேம்பாட்டு அறிக்கையின்படி ஓஇசிடி அமைப்பிலுள்ள நாடுகளிலுள்ள மொத்த வேலைவாய்ப்பில் வேளாண்துறையின் பங்களிப்பு சதவீதம் ஒற்றை இலக்கத்திலேயே இருக்கிறது. உதாரணமாக ஆஸ்திரேலியா – 4.1, கனடா – 2.7, பிரான்ஸ் 4.2, ஜெர்மனி 2.4, இத்தாலி 2.0, ஜப்பான் 4.6, ஸ்பெயின் 5.7, ஸ்வீடன் 2.1, சுவிட்சர்லாந்து 4.1, பிரிட்டன் 1.3 என்ற அளவிலேயே இந்த விகிதம் இருக்கிறது. இது 2002-04-ம் ஆண்டுகளில் கணக்கிடப்பட்ட புள்ளிவிவரம்தான். இப்போது இந்த மதிப்பு இன்னும் குறைந்திருக்கும்.
ஓஇசிடி அமைப்பில் 33 நாடுகள் இருந்தாலும் அந்த நாடுகளின் மொத்த மக்கள்தொகை 119 கோடிதான். இதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி (30.7 கோடி) அமெரிக்காவினுடையது. அதனால்தான் வேளாண்துறை சீர்திருத்தம் பற்றிப் பேசும்போது அமெரிக்கா உதாரணம் காட்டப்படுகிறது. இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது.
ஆனால், இந்தியாவின் மக்கள்தொகை அமெரிக்காவைக் காட்டிலும் மூன்றுமடங்கு அதிகம். நிலப்பரப்போ அமெரிக்காவின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதிதான். அதனால், இந்தியாவின் நிலையை அமெரிக்காவுடன் ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஒரு தோராயமாகக் கணக்கிட்டால், வளர்ச்சியடைந்த நாடுகளில் விவசாயத்தை நம்பியிருக்கும் மக்கள்தொகை வெறும் 3 முதல் 4 சதவீதம்தான். அதாவது எல்லா வளர்ச்சியடைந்த நாடுகளையும் சேர்த்தே வேளாண்மையை நம்பியிருப்போரின் எண்ணிக்கை 3 முதல் 4 கோடி மட்டுமே. அதுவே இந்தியாவை எடுத்துக்கொண்டால், சுமார் 60 கோடி பேர் வேளாண்மையை நம்பியிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள எண்ணிக்கையைவிட இது 20 மடங்கு அதிகமாகும்.
வளர்ச்சியடைந்த நாடுகளை ஒப்பிடுகையில் தனிநபருக்கான விவசாய நிலத்தின் அளவும் மிகக் குறைவாகும். உதாரணமாக, அமெரிக்காவிலுள்ள விவசாய நிலத்தைப் பங்கிட்டால் சராசரியாக ஒரு விவசாயிக்குக் கிடைக்கும் பரப்பு 418 ஏக்கராகும். ஆனால், அதுவே இந்தியாவில் இருக்கும் 15.8 கோடி ஏக்கர் விவசாய நிலத்தை 1.29 கோடி விவசாயிகளுக்குப் பங்கிட்டால் ஒருவருக்கு வெறும் 1.23 ஏக்கர்தான் கிடைக்கும்.
இந்தியாவில் குறைந்த அளவில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மிக மிக அதிகம். அரசு அளித்திருக்கும் அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 64.77 சதவீதம் பேர் ஒரு ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விளிம்புநிலை விவசாயிகள் எனவும், 18.52 சதவீதம் பேர் 1 முதல் 2 ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகள் எனவும், 10.93 சதவீதம் பேர் 2 முதல் 4 ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் மத்திய நிலை விவசாயிகள் எனவும் தெரியவந்திருக்கிறது. இதன்படி பார்த்தால், நம் நாட்டு விவசாயிகளில் 94.22 சதவீதம் பேரிடம் 4 ஹெக்டேருக்கும் குறைவான நிலமே இருக்கிறது.
மேலும், நாட்டில் அதிகம்பேர் விவசாயத்தைத்தான் நம்பியிருக்கின்றனர். அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களில் சில தவறுகள் இருந்தாலும், இந்த உண்மையை யாரும் மறுக்கப் போவதில்லை. அப்படியானால், பிரதமர் சொல்வதுபோல் வேளாண்துறையிலிருந்து சுமார் 20 கோடி பேரை வெளியேற்றத்தான் வேண்டும். அப்போதுதான் அவரது கருத்துப்படி நெருக்கடி குறையும். அப்படியானால் வேளாண்மையிலிருந்து வெளியேறும் மக்களை என்ன செய்வது? நமது பொருளாதாரத்தின் வேறு ஏதாவது துறையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க முடியுமா?
நடைமுறையில் அது சாத்தியமேயில்லை. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், எந்தத் துறையும் இவ்வளவு அதிகமான ஆள்களுக்கு வேலை வழங்கும் நிலையில் இல்லை. வேலைக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதிக அளவில் அமைப்புசார் பணிகளை வழங்கும் அரசுத்துறையும் இப்போது திணறி வருகிறது.
அண்மையில் ஆந்திரத்தில் குரூப் – 4 பதவிகளுக்கான 638 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானபோது சுமார் 12 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். மாநிலம் முழுவதும் 2,894 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. இந்த ஓர் உதாரணம் போதாதா, அரசு வேலைக்கும் எவ்வளவு போட்டியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள?
வேளாண்துறையில் இருந்து குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையிலான மக்களை வேறு துறைக்கு மாற்றவும், வேளாண் நிலங்களின் பரப்பை ஒன்றுபடுத்தவும் பிரதமர் எடுக்கும் முயற்சியால், வேளாண்துறைக்கு வெளியே அதிகம் பேர் வேலையில்லாமல் இருப்பார்களே ஒழிய, வேலைவாய்ப்பின்மையைத் தீர்க்க முடியாது.
போதிய வருமானம் இல்லாத நிலையில், விவசாயத்தைத் தொடர்ந்து செய்வதற்குப் பெரும்பாலான இந்திய விவசாயிகள் விரும்பவில்லை. வேறு ஏதாவது நல்ல வேலைவாய்ப்புக் கிடைத்தால், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு மகிழ்ச்சியாகச் சென்றுவிடுவார்கள். பாதுகாப்பான வருமானம் தரும் வேலைவாய்ப்புக் கிடைக்குமென்றால், விவசாயத்தை விட்டுச்செல்வதில் அரசைவிட விவசாயிகளுக்கு அதிக மகிழ்ச்சி இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
தொழில் மயமாதலை முடுக்கிவிட்டு அதன் மூலம் வேளாண்மையிலிருந்து மக்களை விடுவிக்கலாம் என்பது இப்போது முன்வைக்கப்படும் வாதம். அமெரிக்காவுக்குப் பொருந்தும் இந்தக் கொள்கை, இந்தியாவுக்குப் பொருந்தவே பொருந்தாது.
ஏனெனில், அமெரிக்காவில் வேளாண்துறையும்கூட தொழில்மயமாகிவிட்டது. நிலம் ஒன்றிணைக்கப்பட்டு பெரும்பரப்பில் ஒரே மாதிரியான விவசாயம் செய்யப்படுகிறது. தேவைப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அங்கு மிக மிகக் குறைவு. எல்லாம் இயந்திரமயமாகிவிட்டதால், ஒரு சிலரே பல நூறு ஏக்கர் நிலத்தில் விவசாயப் பணிகளைக் கவனித்துக் கொள்ள முடிகிறது. அங்கிருப்பவர்கள் எல்லாம் பெரு விவசாயிகள். அரசு வழங்கும் மானியங்கள் எல்லாம் பெருவிவசாயிகளின் நலனுக்கானவையாகவே இருக்கின்றன. இதற்கெல்லாம் மேலாக, ஒரே பொருளை பெருமளவில் உற்பத்தி செய்யும் நுட்பமே அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் அப்படியில்லை. ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான பொருள் உற்பத்தியில் பல நூறு பேர் ஈடுபடுகின்றனர். இங்கு விவசாயம் என்பது வெறும் உணவு சப்ளை செய்யும் அமைப்பல்ல. இந்தியாவின் பெரும் மக்கள்தொகைக்கு வாழ்வாதாரமே இதுதான்.
ஒருபக்கம் தானியங்கள் வீணாவது, மறுபுறம் மக்கள் பலர் உணவு கிடைக்காமல் பசியோடு நாள்களைக் கழிப்பது என வேளாண்துறையில் இருக்கும் முரண்கள் பற்றி ஏற்கெனவே பலமுறை விவாதித்திருக்கிறோம். இதுவரை அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் காகிதங்களில் மட்டும்தான் வறுமையை ஒழித்திருக்கின்றன. இந்தியாவில் சுமார் 70 சதவீதம்பேர் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று பல ஆய்வறிக்கைகளில் சுட்டிக்காட்டிய பின்பும், அரசு அதை ஏற்க மறுக்கிறது. நாட்டில் வெறும் 7 முதல் 8 சதவீதம் பேருக்குத்தான் பாதுகாப்பான முறைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு இருக்கிறது. கொஞ்சம்பேர் சுயதொழில் செய்கிறார்கள். இன்னும் சிலர் பணக்காரர்கள். இதுபோக, நாட்டில் மீதியிருக்கும் 70 சதவீதம் பேர் ஏழைகள்தான் என்கிற உண்மை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கப்படுகிறது என்று தெரியவில்லை.
இந்திய விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், நமது சிறு பண்ணை விவசாயத்தை நல்லதொரு வாய்ப்பாகக் கருத வேண்டும். வளர்ச்சி என்கிற பெயரில் நமது விவசாயத்தின் இந்தப் பண்பு அழிக்கப்பட்டுவிடக்கூடாது. மக்கள் நலன் பேணப்பட வேண்டும், வேளாண்மை வளர்ச்சியடைய வேண்டும், அனைவருக்கும் உணவும் உரிய வேலையும் வழங்க வேண்டும் என அரசு உண்மையிலேயே விரும்புமானால் விவசாயத்தைச் சீர்திருத்துவதற்கு இந்தியாவுக்குப் பொருந்தும் சிறந்த உத்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு விளையாட்டுப் போட்டியை நடத்த ரூ. 70 ஆயிரம் கோடி செலவு செய்யும் அரசால் இது முடியாதா என்ன?

No comments:

Post a Comment