Thursday 3 March 2011

இயற்கை விவசாயமே எங்கள் உயிர் மூச்சு ராமரணை கிராம விவசாயிகள் பெருமிதம்

திம்பம் அருகே உள்ள ராமரணை கிராம மக்கள் இயற்கை விவசாயம் புரிந்து நல்ல விளைச்சலை பெற்று முன்னோடியாக உள்ளனர்.சத்தியமங்கலத்தில் இருந்து 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து சென்றால் திம்பம் மலைப்பகுதி வரும். அங்கிருந்து தலமலை வழியாக சென்றால் 20வது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராமரணை என்னும் நஞ்சுபடாத கிராமம். இயற்கையான காற்று; திரும்பிய பக்கமெல்லாம் பச்சைப் பசேல் என்று வளர்ந்து நிற்கும் மரங்கள் காணப்படுகிறது.
யானை நடமாட்டம் அதிகமுள்ள இந்த கிராமத்தில் 15 குடும்பங்களில் 60க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மின்சார வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி எதுவுமின்றி இயற்கையோடு அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வனத்தை நேசித்து பழகிப்போன மக்களுக்கு வன விலங்குகளை பார்த்தும் பயம் கிடையாது. 70க்கும் மேற்பட்ட ஏக்கரில் மானாவாரியாக இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் இன்று செயற்கை ரசாயன உரங்களை கொண்டு பயிரிடுகின்றனர். ஆனால், இந்த கிராமத்தை சேர்ந்த சில விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்கின்றனர். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் வானகம் போன்ற சில பசுமை அமைப்புகளும் ஊர் ஊராய் சென்று இயற்கை விவசாயத்தை பறைசாற்றி வருகின்றனர்.

ராமரணை கிராமம் மழை வளம் அதிகமுள்ள கிராமம். மானாவாரி விவசாயம் இங்கு செழிப்போடு உள்ளது. இப்பகுதி மக்களின் விவசாய முறையே வித்தியாசப்பட்டது; வனத்தில் உள்ள காய்ந்த இலைகள், சருகுகள் மேலும் கால்நடை கழிவுகள் முதலியவற்றை கொண்டு உரம் தயாரித்து பயன்படுத்துகின்றனர். பீன்ஸ், ராகி, எள் போன்றவற்றை பயிரிடுகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஈரோடு, திருப்பூர், கோத்தகிரி பசுமை அங்காடிகளில் விற்பனை செய்கின்றனர். இயற்கை முறையில் விளைவித்த பொருட்களுக்கு சந்தையில் அதிக விலை கிடைக்கிறது.

ராமரணையை சேர்ந்த ராமன் கூறியதாவது: பல ஆண்டுகளாக நாங்கள் இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். கண்ட கண்ட ரசாயன உரம் போட்டு மண்ணை பாழ்படுத்த விரும்ப மாட்டோம். இயற்கை விவசாயத்திலேயே எல்லாம் கிடைக்கும் போது எதுக்கு செயற்கை. சுடர் நிறுவனம் மூலம் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி நடந்தது. இப்போது நாங்களே மண்புழு உரம் உற்பத்தி செஞ்சுக்கறோம்; நல்ல விளைச்சல், நல்ல விலை இரண்டுமே கிடைக்குது. காட்டுக்குள்ளே இயற்கையோட ஒன்றி வாழ்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment